DIL BECHARA (TAMIL)

MOVIE WIKI
DIL BECHARA (TAMIL) CAST & CREW
Production: Fox Star Studios | Cast: Sushant Singh Rajput | Direction: Mukesh Chhabra | Music: AR Rahman

DIL BECHARA (TAMIL) RELATED CAST PHOTOS

DIL BECHARA (TAMIL) MOVIE REVIEW

Review By : Behindwoods Review Board, Karthikeyan S Release Date : Jul 24,2020
Movie Run Time : 1 Hour 40 Minutes Censor Rating : -

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், சஞ்சனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'தில் பேச்சரா' (Dil Bechara ). ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். முகேஷ் சப்ரா (Mukesh Chhabra) இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

தைராய்டு கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் கிஸி பாஸுவுக்கு (Kizie Basu) கல்லூரி, வீடு, மருந்து மாத்திரை என வாழ்க்கை சுவாரஸியமற்றதாக இருக்கிறது. தன் சலிப்பான நாளை டைரியில் குறிப்பிடும் அவர் அடுத்த நாளும் இப்படி சலிப்பான நாளாகத் தான் இருக்கும் என்கிறார். ஆனால் கிஸியின் நினைப்பு பொய்யாகிறது. கிஸியின் வாழ்க்கையை சுவாரஸியமாக்க வருகிறான் இம்மானுவேல் ராஜ்குமார் ஜூனியர் என்கிற மேனி.

மேனிக்கு osteosarcoma என்கிற ஒரு வகை கேன்சர். பெங்காலியான கிஸி மற்றும் தமிழரான மேனி ஆகிய இருவரது வாழ்வில் நிகழும் காதல், ஆசை, மகிழ்ச்சி, சோகம், அழுகை இவை தான் 'தில் பேச்சரா'. இம்மானுவேல் ராஜ்குமார் என்கிற மேனியாக சுஷாந்த். கிஸி பாஸுவாக சஞ்சனா சங்கி.

இந்த இரண்டு கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்கள், நிகழ்வுகளுக்கு அவர்களது ரியாக்சன்கள் என்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதனை உணர்ந்து இருவரும் அந்தந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கின்றனர். படம் பார்க்கும் நமக்கு ஒரு இடத்தில் கூட சுஷாந்த்தும் சஞ்சனாவும் தெரியவில்லை என்பது தான் அவர்களின் திறமைக்கு சான்று.

நினைத்தையெல்லாம் செய்யும் மகிழ்ச்சியான துறுதுறு இளைஞரான மேனியை பார்த்ததுமே வெறுக்கும் கிஸிக்கு போகப்போக அவனை பிடித்து விடுகிறது. எப்பொழுதும் சோகமே உருவாய் இருக்கும் கிஸிக்கு சின்ன சின்ன சந்தோஷங்களை காட்டுகிறான் மேனி. கிஸியின் ஆசைகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றத் துடிக்கிறான். இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்குகின்றனர்.

மேனி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபேன். அவர் மாதிரி பெரிய ஹீரோவாக வேண்டும், ஃபேமஸாக வேண்டும் என கிஸியிடம் சொல்கிறான் மேனி. ரஜினியின் ஹீரோயிஸத்தை கலாய்க்கும் கிஸியிடம் ஹாலிவுட்ல பண்ணா wowனு சொல்லுவீங்க, அதே கோலிவுட்ல பண்ணா How கேட்பீங்களா ? என்று மடக்கும் காட்சிகள்லாம் செம.

குறைவான கேரக்டர்கள், பெரிய திருப்பங்கள் இல்லாத திரைக்கதை என நகரும் படத்தில் இப்படியான வசனங்கள் தான் சுவாரஸியப்படுத்துகின்றன. சில காட்சிகளே வந்தாலும் அசத்தலான பெர்ஃபாமென்சால் ஸ்கோர் செய்கிறார் சயீஃப் அலிகான். 

ஏற்கனவே எமோஷனலான நகரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மேலும் வலு சேர்த்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் இந்த வருடத்தின் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக உள்ளது.  மகிழ்ச்சியான காட்சிகளானாலும் சரி, உணர்வுப்பூர்வமான காட்சிகளானாலும் சரி, பின்னணி இசை அவற்றை வேறொரு தளத்திற்கு உயர்த்தியுள்ளது. உங்கள் கண்களில் இருந்து உங்களை அறியாமலேயே கண்ணீர் எட்டிப் பார்ப்பதை உணரலாம்.

இறுதி காட்சிகளில் பார்வையாளர்களின் கண்கள் குளமாவது உறுதி. அது அந்த காட்சிக்காக மட்டுமல்ல இப்படி ஒரு சிறந்த கலைஞனை  இழந்துவிட்டோமே என்ற வேதனையிலும் தான். இறுதியில் மேனி, கிஸிக்கு எழுதும் கடிதத்தில், ''நம் பிறப்பையும் இறப்பையும் நம்மால் முடிவு செய்ய முடியாது. ஆனால் எப்படி வாழ வேண்டும் என்பதை நம்மால் முடிவு செய்ய முடியும்'' என்று குறிப்பிட்டிருப்பான். அது கிஸிக்கு மட்டும் அல்ல. நமக்கும் தான்.

Verdict: 'தில் பேச்சரா' மிகவும் எமோஷனலான காட்சி அனுபவம். சுஷாந்த் சிங் எனும் மாபெரும் கலைஞனுக்கு கொடுக்கப்பட்ட மிகச் சரியான இறுதி அஞ்சலி
3.25
( 3.25 / 5.0 )




Dil Bechara (Tamil) (aka) Dil Becharaa

Dil Bechara (Tamil) (aka) Dil Becharaa is a Hindi movie with production by Fox Star Studios, direction by Mukesh Chhabra. The cast of Dil Bechara (Tamil) (aka) Dil Becharaa includes Sushant Singh Rajput..